விதைக்கும் இடத்தில் நடக்காதே.. நடக்கும் இடத்தில் விதைக்காதே..

விதைக்கும் இடத்தில் நடக்காதே..
நடக்கும் இடத்தில் விதைக்காதே..

மனிதன் சில நாட்கள் நடந்தாலே அவ்விடம் இறுகி போய் பாதையாகிவிடும். அப்படியிருக்க பயிர் செய்யும் இடத்தில் மிதித்தால் நிலம் இறுகிவிடாதா என்ன??..

மண் இறுகி போனால் நிலத்தை கொத்தி இலகுவாக்க வேண்டும். ஏக்கர் கணக்கில் இருக்கும் நிலமென்றால் உழவு தான் செய்ய வேண்டும்..

இதை தவிர்க்க என்ன செய்வது என யோசிப்போம்.. உழவிற்காக வருடா வருடம் எவ்வளவாயிரங்களை இழக்கின்றோம்.. உழவிற்காக காளைகளை வளர்க்கும் வரை நாம் செலவு ஏதும் செய்யாமல் தான் இருந்தோம். தற்போது இருக்கும் நிலை வேறு என்பது அனைவரும் அறிவோம்.

விதைப்பதற்கெனவும், நடப்பதற்கெனவும் நிலத்தை பிரிப்பது தான் நிரந்தர வேளாண்மையில் முதல் வேலையாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்..

#எப்படி_பிரிப்பது??
1மீ முதல் 4 அடி அகலத்தில் விதைப்பதற்கான பரப்பு..அ பாத்தி என எடுத்து கொள்வோம்.
1.5  முதல் 2 அடி வரை நடப்பதற்கான பாதை என பிரித்து கொள்வோம். பாத்தியில் எந்தவொரு சூழ்நிலையிலும் மிதிக்க கூடாது.
நடைபாதையில் விதைக்க கூடாது. இவ்வாறு நிலத்தை பிரித்து கொள்ளலாம். மேட்டுப்பாத்தியா, பள்ளபாத்தியா என்றெல்லாம் குழப்பம் வேண்டாம். நிலத்தை முதலில் பிரித்து கொள்ளலாம். இதன் மூலம் நிலம் இறுக விடாமல் தடுக்க இயலும்.

#பாசன_முறை கொண்டு பாத்திகளை அமைப்போம்..
இவ்வளவு நாட்கள் கிணற்றிலிருந்து வாய்க்கால் மூலம் பாசனம் செய்திருப்போம். அதன் மூலமே இனி வரும் காலங்களிலும் பாசனம் செய்வதாக இருந்தால் நடைபாதை தான் வாய்க்கால்.. பாத்தியின் அகலம் 4 அடி அகலம் இருக்கும் படி இருக்க வேண்டும்.

தெளிப்பு நீர் பாசனமோ, சொட்டு நீர் பாசனமோ அமைத்து கொள்வதாக இருந்தால் மேட்டு பாத்தி அமைத்து கொள்ளலாம். அதிக உயரம் தேவையில்லை.. அதிகபட்சமாக 1/2 அடி உயரம் போதும். அதனுள் இலைதழைகளையும் எருவையும் போட்டு புதைத்து கூட மேட்டுபாத்தி அமைக்கலாம்.

#மூடாக்கு
மண்ணை மூடி வைத்து விவசாயம் செய்வது தான் நிரந்தர வேளாண்மையில் எளிய முறை.. உழவிற்காக செலவு செய்யும் விவசாயிகள் அதற்கடுத்தபடியாக களையெடுப்பதற்காக செலவு செய்வார்கள்.. இந்த களைகளை கட்டுப்படுத்தும் ஒரு எளிய முறை தான் மூடாக்கு முறை.. சூரிய வெளிச்சம் மண்ணில் படாதவாறு பல்வேறு பயிர்களை கலந்து பயிரிடுவதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம். மண்ணிற்கும் நிழல் கிடைக்கும். இதனால் மண்ணிலுள்ள நுண்ணுயிர் பெருகும். தண்ணீர் ஆவியாவது தடுக்கப்படும். அல்லது மண்ணில் மட்க கூடிய இலைதழை குப்பைகளை நிரப்பவதன் மூலம் மேற்கூறிய பயன்களை பெற இயலும். ஏக்கர் கணக்கில் மூடாக்கிற்கு எங்கே போவதென சந்தேகம் ஏற்படக்கூடும். முதல் முறை விதைப்பு செய்வதற்கு முன் பலதானிய விதைப்பு செய்து அதை பிடுங்கி மூடாக்கிட்ட பின் விதைப்பு செய்யலாம். களைகள் முளைத்தால் பிடுங்கி மூடாக்கிடலாம். ஒவ்வொரு முறை அறுவடை முடிந்த பின் அந்த பயிரை அந்த இடத்திலேயே மூடாக்கிடலாம்.

#ஆரம்பத்தில்_எப்படி_தொடங்லாம்??

10-30 செண்ட் இடத்தில் மாதிரிக்காக செய்து பார்த்து இதில் வேலை செய்து பழகி பிறகு சிறிது சிறிதாக ஒவ்வொரு சாகுபடிக்கும் பரப்பை அதிகரிக்கலாம்.

______

நிரந்தர வேளாண்மை என்பது மேட்டுப்பாத்தி அமைத்து அதில் பயிரிடுவது அல்ல..என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேற்கூறிய முறைகளின் மூலம் உழவர்களின் செலவுகள் குறைய வேண்டும். சந்தையில் வருவாய் கிடைக்கிறதோ இல்லையோ, விவசாயி செய்யும் செலவுகள் இங்கே அதிகம். இம்மாதிரியான முறைகளின் மூலம் செலவுகளை குறைத்து விவசாயம் செய்து பழகிடுவோம்.

மேலும் சந்தேகங்களுக்கு 8526366796 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம்..

நன்றி..

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY