Farming in sand (chennai palavakkam)
சென்னை பாலவாக்கத்தில் ஒரு இடத்தில் தோட்டம் அமைக்க நண்பர் பாலமுருகனோடு சென்றிருந்தோம். அங்கே அந்த இடத்தை காவல் காக்க நேபாளத்தை சேர்ந்த ஒரு ஐயா இருந்தார். அவருடைய தோட்டத்தின் படங்களை தான் பதிவிட்டுள்ளேன். கடற்கரையிலிருந்து 300-400 மீட்டர் தொலைவில் தான் இவருடைய தோட்டம். மணலாக உள்ள நிலத்தில் எப்படி விளைவிப்பது என்றெல்லாம் இவர் யோசிக்கவேயில்லை.. பயிரிட தேர்ந்தெடுத்த இடத்தை சுற்றிலும் கற்களை அடுக்கி மணல் சரியாமல் ஏற்பாடு செய்துவிட்டு மணலில் இலைதழைகளை புதைத்து தண்ணீர் ஊற்றிவருகிறார். பிறகு சில நாட்கள் கழித்து விதைப்பு செய்கிறார். நேபாளத்திலிருந்து ஒரு வகை கீரையை எடுத்து வந்து பயிரிட்டு உணவிற்கு பயன்படுத்துகிறார். ஒரு முறை பயிரிட்டால் பல மாதம் இலைகளை அறுவடை செய்யலாம் என்ற கீரை வகை அது. பாலக்கீரையை போல என நினைக்கின்றேன். கரும்பு, மக்காச்சோளம், பாகல், பசலைக்கீரை, தக்காளி,கத்தரி, மிளகாய், சக்கரைவள்ளி கிழங்கு என பல வகை பயிர்களை பயிரிட்டு உள்ளார். அவருடைய தக்காளி செடிகளை பாருங்களேன்..செடி மண்ணில் விழாதபடி அழகாக ஏற்பாடு செய்துள்ளார். மணல் என்பதால் தண்ணீர் நிற்பதில்லை.. அதனால் அவ்வபோது தண்ணீர் பிடித்து விடுகிறார். இவர் தோட்டம் அமைத்திருப்பதை பார்த்த அந்த இடத்தின் சொந்தக்காரர் மொத்த இடத்திலும் பயிரிடலாமே என ஒரு ஏக்கர் நிலத்தையும் சுத்தம் செய்து வருகிறார்.. மணலாக இருப்பதால் 4 அடி அகலத்தில் அரை அடி ஆழத்தில் பள்ளம் எடுத்து உள்ளே இலைதழைகளையும் எருவையும் புதைத்து அதில் பயிரிடலாமென எனக்கு தெரிந்ததை கூறி வந்துள்ளேன். அந்த இடத்திற்கு மூடாக்கிடுதல் தான் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தழைசத்துகளை அதிகமாக கொடுக்க வேண்டும். அதனால் என்ன கழிவுகள் கிடைத்தாலும் கொண்டு வந்து புதைத்தும் மூடாக்கிட்டும் பயிரிடலாம் என்பது எனது எண்ணமாக இருந்தது. மணற்பாங்கான பூமியோ, பாறை நிலமோ பயிரிடலாமென முடிவெடுத்துவிட்டால் தாராளமாக செய்யலாம் என்பதற்கு இந்த நேபாள ஆசிரியரின் தோட்டம் போதுமே..
Nice
ReplyDelete