The Smiles of Three Generation

 Smiles of three generation 

#agamagilan #paramu #arumugam 





பதிமூன்று வயசுல மேழி புடிச்சுவனுங்க நானு.. என்று தான் தோட்டத்திற்கு வரும் அனைவரிடமும் அறிமுகமாகி கொள்வார் என் தந்தை ஆறுமுகம். ஏறக்குறைய 50 வருடங்களுக்கும் மேலாக விவசாயத்தில் அனுபவமும் வாழ்க்கையின் போராட்டமும் தான் இவரின் பயணம். டென்னிஸ் விளையாட்டு வீரர் பெடரர் தன்னுடைய இறுதி ஆட்டங்கள் அனைத்திலும் தோல்வி கண்டதாக ஒரு பதிவை கடந்த மாதம் படித்தேன். அப்பாவின் விவசாய பயணங்களும் அப்படி தான். மூன்று மகன்களும் ஒரு மகளும் என 4 வாரிசுகள். நாங்கள் அனைவரும் திருமணத்திற்கு பிறகு வெவ்வேறு பகுதிக்கு வந்துவிட கடந்த சில வருடங்களாக நாங்கள் இருக்கும் நகரத்தில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள கிராமத்தில் அம்மாவும் அப்பாவும் மட்டும் தனியாக விவசாயம் செய்துவந்தார்கள். அவரின் விருப்பபடி மட்டுமே விவசாயம் செய்யவிரும்பியதால் அவரை தொந்தரவு செய்யவில்லை. கடந்த வருடத்தில் விவசாயத்தில் மிக மோசமான சூழ்நிலை அப்பாவிற்கு. பருத்தி வெங்காயம் நிலக்கடலை என மாற்றி மாற்றி பயிரிட்டார். கடைசியில் ஐந்தாறு லட்சம் நட்டமும் கடனும்...சரியான உணவும் ஓய்வும் இல்லாமல் இருவருக்கும் உடல்நிலையும் மோசமடைந்தது.. வீட்டில் அனைவருமாக முடிவு செய்தோம். அதன்படி பெற்றோருக்கு விவசாயத்தில் இருந்து ஓய்வு. 


இது அப்பாவிற்கு பெரும் தண்டனையாக கூட இருக்க கூடும்.  பதிமூன்று வயதில் மேழி பிடித்தவர், 50 ஆண்டுகாலம் விவசாய நிலங்களில் உள்ள வீட்டில் மட்டுமே வாழ்ந்தவரை வீட்டிலே ஓய்வெடுக்க விடுவது தண்டனை தான் அல்லவா!!!


எனது அப்பா போன்றோரால் இப்போது உள்ள வியாபார ரீதியான விவசாய முறையுடன் ஒன்றிப்போய் விவசாயத்தில் வெற்றிபெற முடியவில்லையோ என்று தான் தோன்றுகிறது.. அறுபத்தி மூன்று வயதை நிறைவு செய்கையில் விவசாயத்தில் இருந்து பணிஓய்வு பெற்றுவிட்டார். இந்த ஐம்பது ஆண்டு கால விவசாய அனுபவம் மிகப்பெரியது. அதை ஆவணப்படுத்தவேண்டும் என்று நினைத்துள்ளேன். அதை பின்னர் எழுதலாம்..


கடந்த ஐம்பது ஆண்டுகாலமும் விவசாயம் செய்தது குத்தகை நிலங்களில் மட்டும் தான். அவ்வாறு விவசாயம் செய்தது ஒரே ஊரில் இல்லை.. கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான பகுதிகளில்.. ஐம்பது ஆண்டு விவசாயம் செய்து என்ன சம்பாரித்தீர்கள் என கேட்ட அனைவருக்கும் அவர் சொல்லும் ஒரே பதில் "என் நாலு புள்ளைகளையும் வளர்த்தி  பெருசாக்கிருக்கேன்". 


இறுதியாக, அவருடைய கடைசி வருட விவசாய வருவாய் ஆறு லட்ச ரூபாய் கடன். விவசாய நிலம் வாங்கி அதில் விதைவங்கி துவங்க நாங்கள் சேமித்த தொகை அனைத்தையும் கடன்களுக்கு அடைத்துவிட்டு பாதி பாக்கி சொல்லிவிட்டு பெற்றோரை வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டோம். எங்களுடைய குழந்தை பருவம் ,இளமை காலம் அவர்களை நம்பி, அவர்களுடனே இருந்தோம். அவர்களுடைய வயதான காலத்தில் தனியாக இருக்கிறார்களே என்ற ஏக்கம் நிறைய இருந்தது. அதற்காக இந்த தொகை செலவழித்ததாக நினைத்து மனதை தேற்றிக்கொண்டோம். 


கொரொனாவிற்கு முன்பு விவசாயம் செய்யும்போது ஏக்கருக்கு நாற்பதாயிரம் வீதம் ஒரு சாகுபடிக்கு ஆன செலவு கொரனாவிற்கு பிறகு இரண்டு மடங்காக கூடி ஏக்கருக்கு எண்பதாயிரம் வரை ஆன செலவு ஏற்பட்ட கடனை இரண்டு்மடங்காக ஆக்கிவிட்டது என்பது தான் நிலை. 


அனைத்தும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ஓய்வில் இருக்காங்க. இனி விவசாயம் செய்தால் விதைசேமிப்பிற்காக நாம் துவங்க இருக்கும் விதைவங்கியில் தான். அது வரை அனைவருக்கும் விவசாயத்திற்கு ஓய்வு தான்..என உறுதியாக கூறிவிட்டேன். 


ஓய்வாக இருந்து பார்த்திடாத மனுசனை பணி ஓய்வு கொடுத்த மகிழ்ச்சியில் நானும், அப்பாருடன் விளையாட வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் மகிழனும், கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் விவசாயம் செய்வோம் என அப்பாவும்..என மூன்று தலைமுறையினரின் முகமலர்ச்சி!!!!


Smiles of three generation

Aadhiyagai Paramez 

12.10.2022

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY