"விதைகள் சார்ந்த பணிகளுக்காக ஒரு நிலம்"

பாரம்பரிய விதைகள் சார்ந்த வேலைகளை எட்டு வருடங்களாக குத்தகை நிலங்களில் செய்து வந்ததை இந்த வருடத்தோடு நிறுத்திவிட்டோம். 

விதைகள் சார்ந்த பணிகளுக்காக 2023 ஆம் வருடம் நமக்கென ஒரு நிலம் அமையபெறவுள்ளோம். 

கொரொனாவிற்கு முன்பே இதற்கான ஏற்பாடுகளை செய்தும் கூட சரியான முறையில் இடத்தை தேர்வு செய்யாததால் மீண்டும் தேடினோம். 2023 நல்ல நம்பிக்கை கொடுக்கும் என நம்புகிறோம். 

இருப்பினும் பாரம்பரிய விதைகளை சேகரித்துக்கொண்டே இருக்கிறோம். விதைகளுக்கான பணிகளில் வெறுமனே விதைகள் சேகரிப்பது மற்றும் விதைகளை பரவலாக்குவது மட்டும் வேலை இல்லை. இவை இரண்டும் சிறிய செயல்பாடுகளே.. 
இதற்கிடையிலான விதைகள் சார்ந்த ஆவணபடுத்துதல் வேலைகளுக்கு சொந்தமாக ஒரு பண்ணை என்பது மிக அவசியம். அந்த நிலம் தான் அனைத்திற்கும் ஆதாரம். அந்த ஆதாரத்தை 2012 முதல் தேட துவங்கி 10 வருடங்களுக்கு பிறகு 2023 இல் பெறவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. 

விவரம் தெரிந்தவரையில் மூன்று தலைமுறைகளாக சொந்தமாக விவசாய நிலம் இல்லாமல் விவசாயம் செய்து வந்திருந்த முந்தைய தலைமுறையினர். 

65 வருடங்களாகும் தந்தை தனது பதினான்காவது வயது முதலே விவசாயத்தை தான் செய்து வருகிறார். 50 வருட விவசாய அனுபவமிக்கவர். ஆனால் சொந்தமாக சிறிதளவும் நிலமில்லாமல் குத்தகை நிலங்களிலேயே ஐம்பது வருட காலம் செய்து வந்தவர். 

2012 இல் விவசாயம் செய்ய நான் வந்தபின்னர் ஒரு சொந்தநிலம் வேண்டும் என்று தேட துவங்கியபோது கையில் ஒரு பைசா பணம் இல்லாமல் வெறும் கனவுகளோடு மட்டும் நிலம் தேட துவங்கினோம். 

2014 ற்கு பிறகு பாரம்பரிய விதைகள் சேகரிப்பில் ஈடுபட துவங்கிய பிறகு, எங்கள் கனவுகளுடன் சேர்த்து பாரம்பரிய விதைகள் சார்ந்த பணிகளுக்காகவும் சேர்த்து நிலம் தேட துவங்கினோம். 

2020 இல் அதற்கென வாய்ப்பு கிடைத்தும் அதிக தூரம் காரணமாக அந்த நிலத்தில் பணிகளை தொடர இயலவில்லை. 

2022 இல் குத்தகை நிலங்களில் செய்து வந்த விவசாயத்தை நிறுத்தினோம். 

2023 இல் பாரம்பரிய விதைகள் சார்ந்து மட்டும் விவசாயம் செய்வது என முடிவெடுத்து அதற்கான நிலம் நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கவேண்டும் என தேடுகிறோம். 

கடந்த பத்து வருட அனுபவம் எங்களுக்கு எண்ணற்ற பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இப்போது தான் துவங்கியதுபோன்று உள்ளது. பத்து வருட அனுபவத்தில் அடித்து துவைத்து காயப்போட்டுள்ளது போல தான் உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக நிலமில்லாமல் எந்த வேலையையும் துரிதபடுத்த வேண்டாமென அமைதியானோம். முழுமையில்லாத வேலை செய்வது போல உணர்ந்து சுற்றிதிரிந்தோம். 

நிலம் தான் விதைகளுக்காக செய்யும் வேலைகளை முழுமைபடுத்தும். முழுமைபடுத்தும் என்ற சொல் நிறைவு தரும் என்ற அர்த்தம் அல்ல.. அதுதான் துவக்கத்திற்கான புள்ளி என்று அர்த்தம். 2023 அதற்கான வழிகொடுக்கும் என நம்புகிறோம்.  
ஆவலோடு காத்திருக்கிறோம். 

எங்களின் எண்ணங்களுக்கு தங்களின் மனங்களின் மூலமாக வலுகொடுங்கள். வலுசேர்க்கும் மனங்களின் எண்ணங்கள் மூலமாக மட்டுமே பணிகளை தொடர்ந்துகொண்டு உள்ளோம். 

நன்றி
Aadhiyagai Paramez 
Aadhiyagai Seedsavers Farm 
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் +918526366796

4.12.2022

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

பீர்க்கன் விதை பன்மயம் RIDGE GOURD SEED DIVERSITY