பூந்திக்கொட்டை / பூவந்தி மரம் / சோப்புக்காய் மரம் Soapnut tree / Indian soapberry tree / washnut tree
பூந்திக்கொட்டை / பூவந்தி மரம் / சோப்புக்காய் மரம்
Soapnut tree / Indian soapberry tree / washnut tree
இயற்கை மனிதருக்கு அளிக்கும் பல அரிய கொடைகளில் ஒன்று மரங்கள். இவை உடலுக்கும், மனதுக்கும் பலவித நன்மைகள் தருவதாக அமைந்திருக்கும். சில மரங்களின் பயன்கள், சாப்பிடும் மருந்தாகவும், சில வெளி உபயோகத்துக்கும் என்ற வகையில் இருக்கும். சில மரங்கள் உள்ளுக்கும் மேலுக்கும் பயன்கள் தரும் வகையில் இருக்கும். அப்படி ஒரு பயன்தரும் மூலிகை மரம்தான் பூந்திக்கொட்டை மரம் எனும் மணிப் பூவந்தி மரம். கிராமங்களில், பூந்திக்கொட்டை மரம், பூவந்தி மரம், சோப்புக்காய் மரம் என்று அழைக்கப்படும் மணிப்பூவந்தி மரம், அடர்ந்த மலைப் பகுதிகளில் பரவலாக வளரக் கூடியது.
தமிழகத்தின் ஆனைமலை, பழனி மற்றும் கொல்லிமலைப் பகுதிகளின் உயரமான இடங்களில் காணப்படும் மணிப்பூவந்தி மரம், பல ஆயிரம் ஆண்டு கால தொன்மையான பாரம்பரியம் கொண்ட, பழம்பெரும் மரங்களில் ஒன்றாகும்.
இந்த மரத்தின் இலைகள் சற்றே நீண்ட வடிவம் கொண்டவை, வெண்மை வண்ண மலர்கள் கொத்தாகப் பூத்துக் குலுங்கும். கோடைக் காலத்தில் காய்க்கும் இந்த மரத்தின் காய்கள் மற்றும் பழங்கள், மிக்க மருத்துவ நன்மைகள் கொண்டவை.
பன்னெடுங்காலம் முன்னரே, மணிப்பூவந்தி மரம், தமிழர்களின் குளியலில் முக்கிய இடம் பெற்ற, ஒன்றாகத் திகழ்ந்து வந்திருக்கிறது.
இந்த மரத்தின் பழங்களை, கொட்டை நீக்கிவிட்டு, கைகளால் நன்கு பிசைந்து நீரில் இட்டு ஊறிய பின் எடுத்தால், நல்ல மணத்துடன் கூடிய நுரை உண்டாகும். இந்த நீரை, எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் காலங்களில், தலையில் உள்ள எண்ணெயை நீக்க, தலையில் தேய்த்துக் குளிக்க, எண்ணெய் முற்றிலும் நீங்கி விடுவதோடு மட்டுமல்லாமல், தலையில் உள்ள அழுக்குகளையும் வெளியேற்றி தலைமுடியை, பளபளப்பாகவும், மிருதுவாகவும் ஆக்கும் தன்மை படைத்ததாகும்.
இதனாலேயே அக்காலங்களில், அரப்புத் தூளுடன் மணிப்பூவந்தி பழங்களை கலந்து அரைத்து, தலைக்குத் தேய்த்துக் குளித்து, எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் அழுக்குகளை நீக்கும் இயற்கை ஷாம்பூவாகப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த மூலிகையை குளிக்க பயன்படுத்திய பின் வெளியேறும் நீரில் எந்த விதமான வேதிப்பொருள்களும் இல்லாததால் செடிகளுக்கு பாய்ச்சலாம்.எந்த விதமான வேதிப்பொருள் பாதிப்பும் செடிகளுக்கு வராது.
பெண்கள் அனு தினமும் அணிந்திருக்கக் கூடிய நகைகளான, தோடுகள், மூக்குத்தி, கழுத்துச் சங்கிலி, கை வளையல் மோதிரம் போன்ற தங்க நகைகள் தினசரி பயன்பாடுகளால், காலப் போக்கில் நிறம் மங்கலாகும். இது போன்ற நகைகளை, பூவந்திக் கொட்டைகளை இட்ட நீரில், சற்று நேரம் ஊற வைத்து, அதன் பின்னர், கைகளால், அந்த நகைகளை நீரிலேயே அலசிவிட்டு வெளியில் எடுக்க, நகைகள் புதுப் பொலிவுடன் மின்னும்.
இவ்வாறு பல பயன்களை அள்ளித்தரும் இம்மரம் ஒரு மூலிகை மரமாகும் .இது காட்டுபகுதி மற்றும் வறட்சியான பகுதிகளில் வளரக்கூடியது .இது மழைக்காலங்களில் பூக்க ஆரம்பித்து கோடைகாலங்களில் பலன் தரும. மரம் நட்ட 4 வருடங்களில் காய்க்க ஆரம்பிக்கும் . நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் .இம்மரத்தை விவசாயிகள் வளர்க்கும் பட்சத்தில் நல்ல பலனை அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை .
பூந்திக்கொட்டை விதைகள் பெற 085263 66796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யலாம். விதைகளை ஓரிரு நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து நாற்றங்கால் பைகளில் நாற்றுவிடலாம். இரண்டு அடி உயரம் வளர்ந்தவுடன் எடுத்து மண்ணில் நடவு செய்யலாம்.
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
Comments
Post a Comment