நிரந்தர வேளாண்மை பண்ணை வடிவமைப்பு Permaculture zones in farm

 நிரந்தர வேளாண்மை பண்ணை வடிவமைப்பு Permaculture zones in farm




விவசாய நிலத்தில், நிரந்தர வேளாண்மை செய்ய துவங்கும் போது, நிலத்தை அதற்கேற்றவாறு பிரித்து வேலை செந்ந வேண்டும். இந்த நிரந்தர வேளாண்மை முறையை புதிதான முறையாக நாம் எடுத்துக்கொள்ள தேவையில்லை. தோட்டத்திற்குள் நாம் குடியிருந்து வேளாண்மை செய்யும் பொழுது, அன்றாட பணிகளை எளிமையாக செய்வதற்காகவும், தொடர்ந்து ஓய்வின்றி வேலை செய்துகொண்டே இல்லாமல் இருப்பதற்காகவும் நாம் நிலத்தை பிரித்து வேலை செய்வதற்காக நிரந்த வேளாண் மண்டலங்கள் (Permaculture Zones) என பெயர் வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் நிலத்தை, அதன் பயன்பாடு மற்றும் பராமரிப்பின் அடிப்படையில் வகைப்படுத்திக்கொள்ள முடியும்.


வீட்டின் அருகாமையில் அதிக கவனம் தேவைப்படும் பயிர்களை வளர்ப்பதில் தொடங்கி, வீட்டிலிருந்து தூரச் செல்லச் செல்ல பராமரிப்புத் தேவை குறையும் பகுதிகளை அடையாளம் கண்டு, அதற்கேற்பப் பயிரிடுதல் இதன் அடிப்படை. இந்த மண்டல அமைப்பு, ஆற்றல், நேரம் மற்றும் உழைப்பை திறம்படப் பயன்படுத்த உதவுகிறது.


விவசாய நிலத்தில் நிரந்த வேளாண் மண்டலங்கள் permaculture zones ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:


மண்டலம் 0: வீடு (Zone 0: The Home)

இது நமது அன்றாட நடவடிக்கைகளின் மையமாக உள்ளது. இங்குதான் ஆற்றல் மற்றும் நீர் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றல் சேமிப்பு மற்றும் நிலையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதற்கான நிரந்தர வேளாண்மை  permaculture கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இந்த மண்டலம் முக்கியமானது.


மண்டலம் 1: வீட்டின் உடனடிச் சுற்றுப்புறம் (Zone 1: The Immediate Surroundings)

இது வீட்டிற்கு மிக அருகில் உள்ள பகுதி. இங்கு நாம் அடிக்கடி, அதாவது தினமும் பல முறை வந்து செல்வோம். சமையலறைக்குத் தேவையான மூலிகைகள், கீரைகள் மற்றும் முட்டை அல்லது இறைச்சிக்கான சிறிய கால்நடைகள் (கோழிகள் போன்றவை) இங்கே வளர்க்கப்படுகின்றன. இதற்கு அதிக கவனம் தேவைப்படுவதால், வீட்டின் அருகே அமைப்பது சிறந்தது.


மண்டலம் 2: சற்று தொலைவில் உள்ள பகுதி (Zone 2: The Semi-Frequent Area)

இது வீட்டைவிட்டு சற்றுத் தொலைவில் இருக்கும் பகுதி. இதற்கு மிதமான கவனம் தேவைப்படுகிறது. இங்கு பழ மரங்கள், புதர்கள், தேனீ வளர்ப்பு பெட்டிகள் மற்றும் பெரிய அளவிலான உரக்குழி அமைப்புகள் போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம்.


மண்டலம் 3: விவசாய மண்டலம் (Zone 3: The Agricultural Zone)

இது முக்கியமாக உணவுப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கான பகுதி. பெரிய அளவிலான விவசாயம், கால்நடை மேய்ச்சல் மற்றும் தானியப் பயிர்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன. மண்டலம் 1 மற்றும் 2-ஐ விட இதற்கு குறைவான பராமரிப்பே போதுமானது.


மண்டலம் 4: ஓரளவு காடுகளாக்கப்பட்ட பகுதி (Zone 4: The Semi-Wild Area)

இது மனிதர்களால் உருவாக்கப்பட்ட நிலத்திற்கும், இயற்கையான சூழலுக்கும் இடையிலான ஒரு பகுதி. இங்கு விறகுக்கான மரங்கள், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் போன்றவற்றை நிர்வகிக்கலாம். இங்கு மனிதர்களின் தலையீடு குறைவாகவே இருக்கும், ஆனால் தேவைப்படும்போது அறுவடை செய்யலாம். உயிர்வேலிக்குள் இருந்த மேய்ச்சல் பகுதியாக எடுத்துக்கொள்ளலாம். 


மண்டலம் 5: இயற்கை மண்டலம் (Zone 5: The Wilderness)

இந்த மண்டலம் பெரும்பாலும் மனிதர்களின் தலையீடு இல்லாமல் விடப்படுகிறது. இது மனிதர்களால் வளர்க்க இயலாத விலங்குகளுக்கான வாழ்விடமாகவும், இயற்கையான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகவும் செயல்படுகிறது. பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த மண்டலம் வலியுறுத்துகிறது. இதை முன்னோர்களின் உயிர்வேலியாக நாம் எடுத்துக்கொள்ளலாம். முன்னர் நாம் வளர்க்காத முயல், காட்டுப்பூனை, கீரி, உடும்பு, மயில், காடை, கவுதாரி போன்ற காட்டு பறவைகள் என நாம் வளர்க்காத உயிரினங்களுக்கான வாழ்விடங்களாக இருக்கும் பகுதியாக இந்த மண்டலத்தை எடுத்துக்கொள்ளலாம். 

சந்தேகங்கள் அல்லது மாற்று கருத்து  இருப்பின் குறிப்பிடுக. 


நன்றி

Paramez Aadhiyagai 

Aadhiyagai Seedsavers Farm 

085263 66796

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke