மண்ணை வளப்படுத்தும் பலதானிய விதைகள்

 பலதானிய விதைப்பு – மண் வளத்தை மீட்டெடுக்கும் எளிய வழி



இன்று பல விவசாயிகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று மண் வளம் குறைவது. பல ஆண்டுகளாக இரசாயன உரங்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்தி வருவதாலும், மண்ணில் கரிமப் பொருட்களை சேர்க்கும் பழக்கம் குறைந்ததாலும், பல இடங்களில் மண் தனது இயற்கை வளத்தை இழந்து வருகிறது. இதன் காரணமாக மண் இறுகுதல், நீர் பிடிப்புத் திறன் குறைதல், மண்புழுக்கள் மற்றும் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் குறைதல் போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற நிலங்களை மீண்டும் வளமாக மாற்ற உதவும் இயற்கை வேளாண் முறைகளில் முக்கியமானது பலதானிய விதைப்பு (Multi-Species Cover Cropping) ஆகும்.


நம் முன்னோர்கள் மண்ணை வளமாக வைத்திருக்க இலைதழைகள், கால்நடை எரு மற்றும் பசுந்தாள் உரங்களை மண்ணில் சேர்த்து உழவு செய்தனர். அதனால் மண் உயிரோட்டமாக இருந்தது. இன்று அந்த நடைமுறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டன. அந்தக் குறையை ஈடுசெய்யும் ஒரு எளிய வழியாக பலதானிய விதைப்பு முறை பயன்படுகிறது.


இந்த முறையில் ஒரே வகை விதையை விதைப்பதற்குப் பதிலாக, தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பசுந்தாள் உரப் பயிர்கள் மற்றும் நறுமணப் பயிர்கள் என பல்வேறு வகைகளை ஒன்றாகக் கலந்து விதைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 25 கிலோ விதைக் கலவை போதுமானது.


தானிய வகைகளில் சோளம், கம்பு, தினை, சாமை, கேழ்வரகு, மக்காச்சோளம் அல்லது நெல் போன்றவற்றில் சிலவற்றைத் தேர்வு செய்யலாம். பயறு வகைகளில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, காராமணி அல்லது கொண்டைக்கடலை போன்றவற்றைச் சேர்க்கலாம். எண்ணெய் வித்துக்களில் எள், நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு போன்றவற்றையும், பசுந்தாள் உரப் பயிர்களாக சணப்பை, தக்கைப்பூண்டு, கொள்ளு, அவுரி, கொழுஞ்சி போன்றவற்றையும், நறுமணப் பயிர்களாக கடுகு, வெந்தயம், சோம்பு, கொத்தமல்லி போன்றவற்றையும் சேர்க்கலாம். இவை எடுத்துக்காட்டுகள் மட்டுமே. உங்கள் பகுதியில் எளிதில் கிடைக்கும் விதைகளை ஒவ்வொரு வகையிலும் 4 அல்லது 5 ரகங்கள் வரை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.


விதைத்த பிறகு பயிர்கள் சுமார் 45 முதல் 60 நாட்களில் பூக்கும் நிலைக்கு வரும். அந்த நேரத்தில் அவற்றை அறுவடை செய்யாமல், அப்படியே மடக்கி மண்ணில் உழவு செய்ய வேண்டும். மண்ணில் மட்கும் இந்தத் தாவரங்கள் கரிமப் பொருளாக மாறி, நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பெருக உதவுகின்றன. இதனால் மண் மென்மையாகி, நீர் பிடிப்புத் திறன் அதிகரிக்கிறது. மேலும், பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இயற்கையாக மண்ணில் கிடைக்க உதவுகிறது.


மண் மிகவும் வளம் குறைந்திருந்தால், இந்த பலதானிய விதைப்பு முறையை இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்தால் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடியும். அதன்பிறகு இயற்கை வேளாண்மை அல்லது குறைந்த இரசாயன உள்ளீடுகளுடன் விவசாயத்தை மேற்கொள்வது எளிதாக இருக்கும்.


பலதானிய விதைகள் தேவைப்படுவோர் தங்களின் பெயர், முழு முகவரி, தொடர்பு எண் மற்றும் தேவையான அளவை WhatsApp: 85263 66796 என்ற எண்ணிற்கு அனுப்பலாம். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் Aadhiyagai Seedsavers Farm மூலம் பலதானிய விதைக் கலவைகள் பார்சல் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.


– Paramez Aadhiyagai

Aadhiyagai Seedsavers Farm

Comments

Popular posts from this blog

கடாரங்காய் கடாநாரத்தை

மரபு விதைகள் தேவைப்படுவோருக்கு

நருவள்ளியம்பழ மரம் Cordia dichotoma Gürke